05/02/2011

அறிவிப்பு

by ஆதவா |

நண்பர்களுக்கு…

சினிவர்சல் எனும் இத்தளத்தை ஆதரித்து பார்த்து படித்து வந்த நண்பர்கள் அனைவருக்கும் முதற்கண் வணக்கம். எனது பல விமர்சனப் பார்வைகளுக்கு ஓட்டளித்து ஊக்கமளித்த இண்ட்லி நண்பர்கள், திரைமணம் நண்பர்களுக்கும் ஒரு ஸ்பெஷல் நன்றி.

சிலரது அறிவுரை காரணமாக இந்த தளத்தை எனது பழைய தளத்துடன் இணைக்கவுள்ளேன். ஆகவே தயவுசெய்து மக்கள் அனைவரும் “குழந்தை ஓவியம்” தளத்திற்கு வருகை தந்து தொடர்ந்து ஆதரவு தருமாறு கேட்டுக் கொள்கிறேன். எனது Followers அனைவரும் குழந்தை ஓவியம் தளத்தில் இணையுமாறும், தொடர்ந்து அத்தளத்திற்கு வருமாறும் கேட்டுக் கொள்கிறேன்.

தள குழப்பங்களுக்காக என்னை மன்னிக்கவும். தொடர்ந்து சினிமா பதிவுகளை குழந்தை ஓவியத்தில் பதிவு செய்கிறேன்.

இப்படிக்கு

அன்புடன்
ஆதவா

தற்போது குழந்தை ஓவியத்தில்

உலகக் கோப்பை யாருக்கு? - கணிப்பு

02/02/2011

Bi-mong (Bad Dream)

by ஆதவா |

bimong2

Direction  Kim Ki-duk

Starring   

Joe Odagiri, Lee Na-young

Year 2008
Language    Korean
Genre : Mystery, Romance,Drama

கனவுகள் இடும் ரகசியங்களின் முடிச்சுக்களை எளிதில் நம்மால் புரிந்து கொள்ள முடிவதில்லை, கனவுகள் மர்மமானவை, அதன் தொடக்கநிலையும் முடிவற்றே முடியும் முடிவுநிலையும் யாராலும் புரிந்து கொள்ள முடியாதவை. சமகால பிண்ணனிகளைப் பின்னி வரும் உறக்கத்தின் விழிப்புநிலைக்கும் விழிப்பின் உறக்கநிலைக்குமான தொடர்பு, எங்கேனும் பேசப்படுகிறதா? இயக்குனர் கிம் கி டுக்கின் Bad Dream கனவுகளின் வெளிப்பாட்டு தொடர்புநிலையையும் அதனால் விளையும் விளைவுகளையும் குறித்து அதற்கேயுரிய மொழியில் பேசுகிறது.

நீங்கள் கனவு காணும் அதே நேரம் அதே கனவு நிகழ்காலத்தில் நடந்து கொண்டிருந்தால் என்ன செய்வீர்கள்? கனவின் போக்கு என்பது எந்த திசையிலும் திரும்பவியலாதது. உங்களின் வாழ்வுக்கு பாதிப்பு உண்டாக்குவதாக இருந்தால் அல்லது உங்களையே நாளை கொல்வதாக இருந்தால் உங்களால் என்ன செய்யமுடியும்? இப்படியொரு சிக்கலான கேள்விக்கு பதிலளிக்க முயன்றிருக்கிறார் இயக்குனர். 

ஜின் (Jin) இன் கனவுகள் அவனின் முன்னாள் காதலியை எளிதில் மறக்கமுடியாத சம்பவங்களின் முரண்பாடான தொகுப்புகளால் நிறைந்திருக்கிறது. ஆனால் இதில் ரன் (Ran) க்கு நடக்கின்ற சம்பவங்களில் நேரடியான தொடர்பு இருக்கின்றன. படத்தின் ஆரம்பத்தில் ஜின் தனது பழைய காதலியை காரில் பின் தொடர்ந்து சென்று கொண்டிருக்கிறான். இடையே திடீரென இன்னொரு கார் வந்துவிட, சுதாரித்து திருப்பி அங்கிருந்து ஜின் மீண்டும் காரில் பின் தொடர்கிறான். ஆனால் ஒரு வயதானவன் இடையில் வர, அவனை இடிக்கும் சமயத்தில் திடுக்கென கனவிலிருந்து வெளியே வருகிறான். அவன் இடித்த இடம், துரத்திய கார் என எல்லாமே அச்சமயங்களில் நிகழ்ந்தவை. போலீஸால் அதை நிகழ்த்தியது ரன் என்று கண்டுபிடிக்கப்பட, தன் கனவுக்கும் நனவுக்கும் தொடர்பு இருப்பதாக அறிந்த ஜின் குற்றத்தை ஒப்புக் கொள்கிறான். குழப்பத்தை அறிந்த போலீஸார் அவனது சொற்களை மறுக்கிறார்கள். kimkiduk_dream-1

ஜின்னின் கனவுகள் தூக்கத்தில் நடக்கும் பழக்கமுள்ள ரன்னுக்குத் தொடர்பு இருப்பது தெரியவர, ரன் தனது பழைய காதலனின் வீட்டுக்குச் சென்று வருவதும், சண்டையிடுவது, முத்தம் தருவதும், உடலைப் பகிர்வதுமாக கனவுகளும் நனவுகள் செல்கின்றன. ஒரு சமயத்தில் கனவு என்பது உறக்கத்தின் விழிப்புநிலை ஆகவே, விழிப்பிலேயே இருந்துவிட்டால் உறக்கமில்லை யாகவே கனவுமில்லை என்று முடிவெடுக்கிறார்கள். தூங்காமலிருக்க முயற்சிக்கிறார்கள். மனிதனின் வாழ்வில் கட்டுப்படுத்த இயலாத விஷயங்களில் தூக்கமும் ஒன்று. தூங்குதல் வாழ்க்கையின் ஒரு பகுதி. அதை எளிதில் அறுத்துவிட முடியாது. இருவரும் கையில் விலங்கிட்டு படுத்துக் கொள்கிறார்கள். ஒருவேளை ரன் தூக்கத்தில் நடப்பதாக இருந்தால் ஜின்னின் கையைவிட்டுப் போய்விடமுடியாது. ஆனால் பெரும்பாலும் இது நடத்தைக்குதவாதது என்றும் புரிந்து கொள்கிறார்கள்.

ஜின்னின் கனவில் இப்பொழுது ரன்னின் காதலனைக் கொல்வதாகக் கனவு வருகிறது. இவர்களின் முடிச்சின் படி ரன் நிஜமாகவே அவளின் பழைய காதலனைக் கொன்றுவிடுகிறாள். அதற்காக சிறைத்தண்டனையும் பெற்றுவிடுகிறாள். தனது கனவுதான் ரன்னின் வாழ்க்கையை இவ்வாறாகப் புரட்டியிருக்கிறது என்பதறிந்த ஜின் விபரீத முடிவுகளை நாடுகிறான். ரன்னும், சிறையிலிருந்தபடியே விபரீதங்களைச் சந்திக்க முடிவெடுக்கிறாள். இறுதியில் என்னவாயிருப்பார்கள்?

இந்த படம் முழுக்க விபரீதகளத்தில் தொடர்புகளைப் பற்றி சொல்கிறது. ஜின் மற்றும் ரன் ஆகிய இரு முகமறியா மனிதர்களின் தொடர்பு கனவுகளின் வழியே நீண்டு, தங்களின் பழைய காதலின் நினைவுகளால் சிக்கலான முறையில் இணைகிறார்கள். இருவருக்குமிடையேயுள்ள உறவு அவர்களையறியாமலேயே (காதல்?) வளர்கிறது. ஜின்னின் பழைய காதலியின் போட்டோக்களைக் கிழித்துப் போடுவதிலிருந்தும் “என்னவானாலும் சரி, நான் உன்னை வெறுக்கமாட்டேன்” என்று ரன் சொல்வதிலிருந்தும் இருவருக்குமிடையேயான நட்பை மிகச்சரியாகப் புரிந்து கொள்ளலாம். முடிவுக்காட்சிகள் ஒரு கவிதையைப் போல உணருகிறேன். படம் பார்த்த யாருடனாவது பகிர்ந்து கொள்ளலாம். ஜின்னின் கனவுகளை ஸ்லோ மோஷனில் காண்பித்திருக்கிறார்கள். ஓரிடத்தில் ஜின் மற்றும் ரன் ஆகிய இருவரோடு அவர்களின் பழைய காதலர்கள் சண்டையிடும் காட்சி கனவுகளின் கூறுகளை மிகச்சரியாகப் பயன்படுத்திய காட்சி. அதிலிருந்தே ஜின்னுக்கும் ரன்னுக்குமான உறவு எப்படி பிணைந்திருக்கிறது என்பதை இயக்குனர் காட்டிவிடுகிறார்.

3 Iron படத்தில் ஒரு தம்பதியினர் வீட்டிற்குள் கதாநாயகனும் நாயகியும் சென்று இரவில் உறங்குவார்கள். அதே வீதி (அதே வீடும்?) காட்டப்படுகிறது. அது ரன்னின் காதலனின் வீடு. இப்பொழுது இப்படத்தில் எழும் கேள்வி என்னவெனில் ஜின் மற்றும் ரன் ஆகிய இருவரில் தவறு செய்பவர்கள் யாராக இருப்பார்கள் என்பதே..

ஜின் ஆக நடித்திருக்கும் ஜப்பானிய நடிகர் Joe Odagiri மற்றும் ரன் ஆக நடித்திருக்கும் நடிகை Lee Na-young ஆகிய இருவரைத் தவிர படத்தில் வேறு எவருமில்லை. அபாரம் என்று சொல்லமுடியாவிட்டாலும் தேவையான நடிப்பு இருவரிடமிருந்தும் கிடைக்கிறது.

இது ஒரு வித்தியாசமான சர்ரியல் வாழ்க்கையைக் குறிக்கும் கதைத்தளம்தான் என்றாலும் இதே கதையை ஹாலிவுட்டில் எடுத்திருந்தால் கொஞ்சம் பிரம்மாண்டமாக எடுத்திருப்பார்கள். கிம் உளவியல் ரீதியாக எடுக்கப் பார்த்திருக்கிறார். எனினும் கனவுகளை மையமாக்கி நடக்கும் நிகழ்வுகளைக் கொண்ட Final Destination கதை வகையறாவைச் சார்ந்திருப்பதால் கிம் கி டுக்கின் இப்படம் மனதளவில் புதியபடமாக ஒட்ட மறுக்கிறது. தவிர அவரது பழைய படங்களில் இருக்கும் நுணுக்கமும், அடர்த்தியும் இதில் குறைவு. பழைய படங்களில் வசனங்கள் குறைவாக இருக்கும், ஆனால் இதில் அப்படி எதிர்பார்க்க முடியாது.

 

01/02/2011

Transsiberian - விமர்சனம்

by ஆதவா |

transsiberian

Direction

Brad Anderson

Starring

Woody Harrelson, Emily Mortimer, Kate Mara, Eduardo Noriega, Ben Kingsley

Year

2008

Language   

English

Genre

Thriller, Crime,Warning : காமம் மற்றும் கடுஞ்சொற்கள் – சில காட்சிகள் குழந்தைகளுக்குகந்தவையல்ல

பயணங்களிலேயே மிக்க இனிமையானதும் அனுபவம் தரக்கூடியதுமானது இரயில் பயணம். விதவிதமான மனிதர்கள், மொழிகள், நிலப்பரப்புகள், உணவுகள் அனுபவங்கள், இத்யாதிகள்….. பிரத்தியேகமான இரயில் சினேகங்கள் நிறைய உண்டு. முன்பின்னறியாதவர்களாகவே இரயில் நண்பர்கள் அறிமுகமாகிறார்கள். அவை ஆபத்திலும் முடிய வாய்ப்பிருக்கிறது. நான் சென்ற சொற்ப இரயில் பயணங்களிலேயே ஒருமுறை ஆபத்துக்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதிலும் இந்திய இரயில்வேயைப் போன்றதொரு மோசம் வேறெங்கும் இருக்காது. ஒருமுறை ஒரு நபருக்கு நிச்சயமான இருக்கையில் இன்னொருவர் அமர்ந்து கடுஞ்சொற்களால் திட்டிக் கொண்டிருக்கிருக்க, டிடிஆரால் வெளியேற்றப்பட்டார். இன்னொரு முறை (திருப்பதி செல்லும் பொழுது) ஒரு இளம் தம்பதிகள் தங்களது தாகத்தை நாளிதழை வைத்து மறைத்து தீர்த்துக் கொண்டிருப்பதை சகிக்க இயலாமல் சண்டையிட்டது (அன்றும் நான் சண்டையிடவில்லை) இதெல்லாவற்றையும் விட, இரண்டாம் வகுப்பில் பயணிக்கும் பொழுது இரவில் ஒரு பயணியோடு நெருங்கிப் பழகிய சக பயணி, அவரது உடைமைகளைத் தூக்கிச் சென்றதும் ஞாபகத்திற்கு வருகிறது.  இதனாலேயோ என்னவோ, சிலசமயம் நல்ல பயணிகளைக் கூட சந்தேகக் கண்ணோடு பார்க்கவேண்டியிருக்கிறது.

transsiberian1Trans-Siberian இரயில்சாலைகளில் ஒரு அட்வெஞ்சர் பயணம் சென்று கொண்டிருக்கும் ராய் (Roy) மற்றும் ஜெஸி (Jessie) தம்பதிகளின் இரயிலறை நண்பர்களாக வருகிறார்கள் அபி (Abby) மற்றும் கர்லோஸ் (Carlos). வழக்கமான சினேகித அறிமுகங்களோடு இவர்களின் நட்பு ஆரம்பிக்கிறது. இர்குஸ் (Irkutsk) எனும் இரயில்வே ஸ்டேசனில் நால்வரும் இறங்கி சுற்றிக் கொண்டிருக்கும் சமயத்தில் ராய், இரயிலை தவறவிட, ஜெஸி மற்ற இருவரோடு லங்ஷ்யா (Ilanskaya) ஸ்டேசனில் இறங்கிவிடுகிறார்கள். கர்லோஸும் அபியும் காதலர்கள், கர்லோஸின் பை முழுக்க ஒரு பொம்மைகளை வைத்திருக்கிறார். தவிர, ஜெஸி மேல் அவருக்கு ஒரு கண்.

லங்ஷ்யா ஸ்டேசனுக்கருகே உள்ள ஒரு ஹோட்டலில் மூவரும் தங்குகிறார்கள். கணவன் ஸ்டேசனில் தவறியதைச் சொல்லி வரவழைக்கிறார். இடையே ஜெஸியும் கர்லோஸும் பனிபடர்ந்த பிரதேசங்களின் ஊடாக இருக்கும் ஒரு சர்ச்சுக்குச் செல்கிறார்கள். அங்கே கர்லோஸ், ஜெஸியை பலவந்தப்படுத்த, ஜெஸி, கர்லோஸைக் கொன்றுவிடுகிறாள். இரயிலைத் தவறிய கணவன் அடுத்த இரயிலேறி திரும்பிவர, ஜெஸியும் ராயும் மீண்டும் பயணத்தைத் தொடருகிறார்கள். அபி மட்டும் தனது காதலன் கர்லோஸைத் தேடிக் கொண்டிருக்கிறாள். 8236_gal

இம்முறை ராய் – ஜெஸி தம்பதிக்கு இரயிலறை நண்பராக வருவது ஒரு புலனாய்வுத் துறை அதிகாரி இலியா (Ilya). கொலை செய்துவிட்டோம் எனும் குற்றவுணர்ச்சியோடே வரும் ஜெஸியை கண்காணிக்கிறார் இலியா. கர்லோஸ் வைத்திருந்த பொம்மைகள் இப்பொழுது ஜெஸி வசம் இருக்கின்றன என்பதைவிட, அவை முழுக்க போதைப்பொருட்கள் என்பதறிந்து பொம்மைகளைத் தூக்கி வீச முற்படுகையில் இலியாவால் கண்டுபிடிக்கப்பட்டு விசாரணைக்கு வருகிறாள். இலியாவோடு வரும் இன்னொரு அதிகாரி கொல்ஜக் (Kolzak), ராய் மற்றும் ஜெஸியை தவிர மற்ற பயணிகளை இறக்கிவிட்டு, அந்த பெட்டியோடு மட்டும் இரயில் ஓரிடத்திற்குச் செல்கிறது. அங்கே ஒரு இராணுவ பங்கரில் கர்லோஸின் காதலியை கட்டிவைத்து துன்புறுத்தியிருக்கின்றனர். கர்லோஸும் அவனிடமிருந்த பணமும் எங்கே என ராய்-ஜெஸி தம்பதியரிடம் கேட்க, கிடைத்த சந்தர்ப்பத்தில் இருவரும் தப்பிவிடுகிறார்கள். அநாதயாக நிற்கும் இரயிலை இயக்கி செல்வதற்குள் இலியாவும் கொல்ஜக்கும் இரயிலினுள் நுழைந்துவிடுகிறார்கள்.

11341_galகர்லோஸ் எங்கே என்று துப்பாக்கி முனையில் கொல்ஜக் கேட்கும் நேரத்தில் இரயில் இன்னொரு இரயிலோடு மோதவிருக்கிறது….. இவர்கள் அனைவரும் தப்பித்தார்களா? ராய் – ஜெஸி தம்பதியினர் என்னவானார்கள் அபி தப்பிப் பிழைத்தாளா என்பது விறுவிறுப்பு நிறைந்த முடிவில்…

இரஷ்ய இருப்புப் பாதைகள், ஆங்கில எழுத்துக்களை மாற்றியெழுதியதைப் போன்றதொரு மொழிப்பிரதேசம், பனி படர்ந்த இரயில்கள் ஸ்டேஷன்கள், அமெரிக்க தம்பதிகள், ஓட்கா, போதை, கொலை, விசாரணை, தீர்ப்பு என்று முற்றிலும் இரஷ்ய படங்களைப் போன்றதொரு மாயை இருந்தாலும் ஆங்கிலப்படத்திற்கான கூறுகளே மிக அதிகமாக இருக்கின்றன.

Transsiberian உலகின் மிக நீளமான இருப்புப் பாதை. பெய்ஜிங்லிருந்து மாஸ்கோ வரை செல்லும் பயணத்தில் கூடாத அல்லது அறியாத நட்பின் விளைவுகள் எத்தனை விதமான பாதிப்புகளில் கொண்டு சேர்க்குமென்பதை சலிப்பற்ற திரைக்கதையில் சொல்லியிருக்கிறார் இயக்குனர் ஆண்டர்சன். ராய் (Woody Harrelson) மற்றும் ஜெஸி ((Emily Mortimer) தம்பதிகள் தங்களின் இருப்புக்கான போராட்டத்தில் காதலை நிலை நிறுத்துவதை மேலோட்டமாக சொல்கின்றனர். காதல் என்பது இருவருக்குமிடையே எதையும் மறைத்துவைப்பதன்று. எப்படி கூடாத நட்பு பிரச்சனைகளைக் கொண்டுவருமோ அதே போன்றதுதான் கூடாத காதலும். போதைப் பொருள் விற்பவனைக் (Eduardo Noriega) காதலிக்கும் அபி (Kate Mara) இறுதியில் செய்யாத குற்றத்திற்காகத் துன்புறுத்தப் படுகிறாள். இரஷ்ய விசாரணை இப்படித்தான் இருக்கும் என்பதற்கு அபியின் தொடையில் கத்தியால் அறுத்து சீண்டுவதை உதாரணமாகக் கொள்ளலாம். 21633_galசில காட்சிகளே வந்திருந்தாலும் இலியாவாக வரும் அதிகாரி பெங்கிங்ஸ்லீயின் (Ben Kingsley ) நடிப்பும் பாராட்டத்தக்கது. ஆங்கிலப்படமென்றாலும் இரயில்கள் மோதுவது ஏதோ இரண்டு மரப்பெட்டிகள் மோதுவதைப் போல சப்பையாக படமெடுக்கப்பட்டிருப்பது பலவீனம். அதேபோல இருவரை மட்டும் கடத்திச் செல்ல ஒரு இரயிலையே பயன்படுத்துவது படத்திலிருந்து தள்ளி நிற்பதாகத் தோன்றுகிறது. துப்பாக்கி வைத்தாலே ஜெஸி அலறிவிடுகிறாள் எனும் பொழுது இன்னும் ஈஸியாக கடத்தியிருக்கலாம்.

இந்த திரைப்படத்தை குறைந்த ஒலியில் கேட்டதால் பிண்ணனி இசையைப் பற்றி எழுதவேண்டிய அவசியமில்லாமல் போயிற்று. அப்படியே எழுதினாலும் “நன்றாக இருக்கிறது” என்றுதான் எழுதுவேன். அதனால் அதனைப் பற்றி கவலைப்படவேண்டியதேயில்லை. பெரும்பாலும் இரயிலுக்குள்ளேயே கதை செல்லுவதால் காமராவில் பெருமளவில் மெனக்கெடவேண்டிய அவசியம் ஒளிப்பதிவாளர் Xavi Giménez க்கு (என்னா பேருடா இது?) ஏற்பட்டிருக்காது. பனி போர்த்திய இரஷ்ய பின்புலங்களை இரயிலைவிட்டு வெளியே செல்லும் பொழுதுதான் பார்க்கவே முடிகிறது. சிதைந்த நிலையிலிருக்கும் சர்ச்சுக்குச் செல்லும் பொழுதுதான் இரயிலை விட்டு வெளியே காண்பிக்கிறார்கள்!

மெல்ல ஒரு அட்வெஞ்சர் பயணம் போலத் துவங்கும் திரைப்படம் சட்டென சஸ்பென்ஸுக்கு மாறி, அடுத்தடுத்த காட்சிகளின் வேகத்தால் சீட்டின் நுனியில் அமரவைத்துவிடுகிறது. பெரும்பாலான ஆங்கில திரில்லர்கள் (நான் பார்த்தவரையில்) ஒரு க்ளூ மட்டும் திறக்கப்படாமல் க்ளைமாக்ஸ் வரையிலும் அதைச்சுற்றியே படம் செல்லும். ஆனால் இப்படத்தில் அப்படி ஏதுமில்லை, கர்லோஸிடமிருந்தோ, அதிகாரிகளிடமிருந்தோ தப்பிப்பதை மட்டுமே காண்பித்திருப்பது உச்சக்கட்ட திரில்லர் (Extreme Thriller) வகையில் சாராமல் போனதற்குக் காரணமாக இருக்கலாம்.  பார்வையாளனை உள்ளே இழுக்கும் எந்தவொரு சினிமாவும் சோபை போவதில்லை. இந்த படம் ஏனோ அவ்வளவாக ஓடவில்லை எனினும் ஒரு சிறந்த திரில்லர் திரைப்படம் பார்த்த திருப்தி உங்களுக்கும் ஏற்பட வாய்ப்பு அதிகமிருக்கிறது.


Trailer

Related Posts Plugin for WordPress, Blogger...
Subscribe